செய்திகள்
தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள்

ஆந்திர சட்டசபையில் அமளி - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ‘சஸ்பெண்டு’

Published On 2019-07-23 09:18 GMT   |   Update On 2019-07-23 09:18 GMT
ஆந்திர சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நகரி:

ஆந்திர சட்டசபையில் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்பாக காணப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தவறாக கூறியதாக சந்திரபாபு நாயுடு உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் அளித்து பதிலடி கொடுத்தார். அதன் பிறகும் தினமும் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. அமராவதி நகரை கட்டமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி உதவியை வழங்க முடியாது என உலக வங்கி கூறியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் அவரை பேச விடாமல் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக எம்.எல்.ஏ.க்கள் புச்சையா சவுத்ரி, நிம்மல ராமநாயுடு, அட்சன் நாயுடு ஆகியோர் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்வதாக துணை சபாநாயகர் சோனா ரகுபதி அறிவித்தார்.

இந்த நடவடிக்கை ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News