செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

தனியார் நிறுவனங்களில் ஆந்திர மாநிலத்தவர்களுக்கே இனி முன்னுரிமை -ஜெகன் மோகன்ரெட்டி அதிரடி

Published On 2019-07-23 08:44 GMT   |   Update On 2019-07-23 08:44 GMT
ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களுக்கென புதிய சட்டம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.
அமராவதி:

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாகவும், அசத்தலாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.

ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டார். இதனையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார்.

விவசாயிகளுக்காக  'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு பகலில் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கினார்.



மேலும் வரும் காந்தி ஜெயந்தி அன்று ஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  அடுத்த அதிரடியாக, நேற்று இளைஞர்களுக்கென புதிய சட்டம் ஆந்திர சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தில், 'தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டு தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் அனைத்து நிறுவனங்களுமே, மொத்த பணியிடங்களில் 75% ஆந்திர மாநிலத்தவர்களை கொண்டுதான் நிரப்ப வேண்டும்.

இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும். தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த நிறுவனங்கள் அரசுடன் இணைந்து, உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

அடுத்த 3 ஆண்டுக்குள் இதற்கான அனைத்து நடைமுறைகளையும் முழுவதுமாக நடத்த வேண்டும். மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை, பணியில் அமர்த்திய ஆட்கள் குறித்த விவரங்களை ஒப்படைக்க வேண்டும்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்காக ஜெகன் மோகன் ரெட்டியினை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News