செய்திகள்
கேஆர்எஸ் அணை

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

Published On 2019-07-23 04:03 GMT   |   Update On 2019-07-23 04:03 GMT
கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
மாண்டியா:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 5,911 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதில் காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 2,911 கனஅடி நீர் கால்வாய்களிலும் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 641 ஆக உள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து காவிரி நீர் வாரிய கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து கே.ஆர். எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நீரின் அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News