செய்திகள்
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

சபாநாயகரின் சம்மனுக்கும் அசைந்து கொடுக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

Published On 2019-07-23 03:53 GMT   |   Update On 2019-07-23 03:53 GMT
கர்நாடக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கும் அசைந்து கொடுக்காத அதிருப்தி எம்எல்ஏக்கள், நேரில் ஆஜராவதற்கு அவகாசம் கேட்டு கடிதம் எழுதி உள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததில் இருந்து ஆரம்பித்த அரசியல் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. 

மேலும், மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

சட்டசபை கூட்டத் தொடரில் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பை நடத்தாமல் சபாநாயகரும் காலம் கடத்துகிறார். அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியும் சட்டசபைக்கு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் காய்நகர்த்தி வருகின்றனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பினார். அதில், இன்று காலை காலை 11 மணிக்கு தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறி உள்ளார். கொறடாக்களின் உத்தரவை மீறியதால் ஏன் உங்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், இதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தார். 



ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களோ சபாநாயகர் நோட்டீசுக்கும் அசைந்துகொடுக்கவில்லை. தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு ஆஜராக முடியாது என கூறியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர், நேரில் ஆஜராவதற்கு 4 வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதி உள்ளனர். 

எனவே, கர்நாடக அரசியல் குழப்பம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே கூறப்படுகிறது. இனி சபாநாயகர் எடுக்கப்போகும் நடவடிக்கையைப் பொருத்தே, அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
Tags:    

Similar News