செய்திகள்
பிரக்யா சிங்

உங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு

Published On 2019-07-22 10:51 GMT   |   Update On 2019-07-22 12:05 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த பிரக்யா சிங், உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்வது என் வேலை அல்ல என பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங்.  சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா சிங்கிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, 'உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது என் வேலை அல்ல.

அதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதனை நேர்மையாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்காக  பணி செய்ய வேண்டும்.



உங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை கொண்டு கலந்துப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்துப் புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்' என்று காட்டமாக கூறியுள்ளார்.

பாஜக தொண்டர்களுக்கிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கனவே, தேச தந்தையான மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்' என்று புகழ்ந்தார்.

அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, 'பிரக்யா சொன்ன கருத்துக்காக என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது'  என கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News