செய்திகள்
கர்நாடகா சட்டசபை

கர்நாடக சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு?

Published On 2019-07-22 06:24 GMT   |   Update On 2019-07-22 06:24 GMT
கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
பெங்களூர்:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார்.

17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது. இதனால் அவர் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளார். என்றாலும் குமாரசாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இது கர்நாடக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் குமாரசாமியை விரட்டுவதில் தீவிரமாக உள்ளனர். எனவே கர்நாடக அரசியலில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் ஏற்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே ஏதாவது செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு விதமான சமரச முயற்சிகள் மேற்கொண்டார். அவரது பேச்சை நம்பி ஒரு அதிருப்தி எம்.எல்.ஏ. கூட மனம் மாறவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய சமரச பேச்சில் மட்டும்தான் ராமலிங்க ரெட்டி என்ற அதிருப்தி எம்.எல்.ஏ. மனம் மாறி திரும்பி வந்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் 12 பேர் காங்கிரஸ்காரர்கள். எனவே அவர்களது ராஜினாமாவை திரும்ப பெற செய்ய ஆட்சி, அதிகாரத்தை காங்கிரசிடம் ஒப்படைக்க நேற்று குமாரசாமி முடிவு செய்தார். காங்கிரசில் இருந்து யார் முதல்வரானாலும் அவரை ஆதரிக்க தயார் என்று குமாரசாமி அறிவித்தார். ஆனால் குமாரசாமியின் இந்த கடைசி முயற்சியும் வெற்றி பெறவில்லை.

15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்றிரவு வெளியிட்ட வீடியோவில், ‘‘குமாரசாமியை மட்டுமல்ல.... புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது’’ என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 15 எம்.எல்.ஏ.க்கள் மீதான உத்தரவை தெளிவுப்படுத்த கோரி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அது போல முதல்-மந்திரி குமாரசாமி, ‘‘நான் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

இதை எதிர்த்து நேற்று 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் அவர்கள், ‘‘குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்காமல் காலம் தாழ்த்துகிறார். அவர் மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாட திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே திங்கட்கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் அவர் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட கோர்ட்டு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களது மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தினார்கள். ஆனால் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க் களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இன்றே ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட கோரும் வேண்டுகோளை ஏற்க இயலாது என்றும் நீதிபதிகள் தடாலடியாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய முகுல் ரோகத்கி மீண்டும் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஆனால் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கியின் வாதம் எடுபடவில்லை. அவர் கூறிய அனைத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த மனு மீதான விசாரணையை நாளை பார்த்து கொள்ளலாம்’’ என்று கூறிவிட்டனர்.

இதனால் கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு பிசுபிசுத்தது. இதன் காரணமாக கர்நாடக அரசியலில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மற்ற 2 மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் சுப்ரீம் கோர்ட்டு எத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பதை பார்த்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட குமாரசாமியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.


இதன் காரணமாக கர்நாடகா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இன்றே குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதன் மூலம் கர்நாடக அரசியல் குழப்பம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான எம்.எல்.ஏ.க்கள் வாதம் முடிவடைகிறது. அதன் பிறகு இன்று மாலை 6 மணிக்கு குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் விவாதம் இன்று 3-வது நாளாக நடந்து வருகிறது. இதற்கு மேல் சபாநாயகரால் காலம் தாழ்த்த செய்ய இயலாது. எனவேதான் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகா கவர்னர் வஜூபாய் மீண்டும் ஒரு உத்தரவை இன்று வெளியிட்டார். அதில் அவர் 24 மணி நேரத்துக்குள் குமாரசாமி தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தன்னை சந்தித்து ராஜினாமா பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News