செய்திகள்
பெண் குழந்தை

பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்

Published On 2019-07-22 06:24 GMT   |   Update On 2019-07-22 06:24 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாசி:

மத்திய அரசு “பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி ஊக்குவித்து வருகிறது.

பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைபாடு மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அங்குள்ள சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி நகரை சுற்றி உள்ள சுமார் 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அனைவரும் ஆண் குழந்தைகள். ஒன்று கூட பெண் குழந்தை இல்லை என தெரிய வந்துள்ளது.

துண்டா தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் 51 குழந்தைகள், பாட்வாரி தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் 49 குழந்தைகள், நவுகான் பகுதியில் 28 கிராமங்களில் 47 குழந்தைகள், மோரி பகுதியில் 20 கிராமங்களில் 24 குழந்தைகள், சின்யலிசார் பகுதியில் 16 கிராமங்களில் 23 குழந்தைகள், புரோலா பகுதியில் 14 கிராமங்களில் 17 குழந்தைகள் என பிறந்த 216 குழந்தைகளும் ஆண்கள் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட நீதிபதி ஆசிஷ் சவுகான் கூறியதாவது:-

பிரசவத்தின்போது பெண் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் மற்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை எது பாதிக்கிறது என்பது பற்றி சோதனை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டுபிடிக்க விரிவான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்தப்படும்.

இந்த கிராமங்களில் 3 மாதமாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்பது தற்செயலான வி‌ஷயம் என நினைக்க தோன்றவில்லை.

எனவே உத்தரகாசியில் உள்ள கிராமங்களில் பணிபுரியும் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து கிராமங்களிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News