செய்திகள்
குமாரசாமி

குமாரசாமி அரசுக்கு நெருக்கடி: கர்நாடக சட்டசபையில் பலப்பரீட்சை இன்று நடைபெறுமா?

Published On 2019-07-22 01:55 GMT   |   Update On 2019-07-22 01:55 GMT
கர்நாடக அரசியல் விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருவதால், சட்டசபையில் இன்று பலப்பரீட்சை நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். இதில் ராமலிங்கரெட்டி, ஆனந்த்சிங், ரோஷன் பெய்க், சுதாகர் ஆகியோர் தவிர மற்ற 12 பேரும் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மேலும், மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பதவி விலகல் கடிதம் கொடுத்திருந்த ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. மட்டும் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் சட்டசபையில் கூட்டணி அரசின் பலத்தை விட எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் பலம் அதிகமாக உள்ளது. பா.ஜனதாவின் பலம், 2 சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உள்ளது.

இப்பிரச்சினையால், கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார்.

அதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. சபை, திங்கட்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசுகிறார். அவர் பேசி முடித்த பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த நிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று கூட்டாக வீடியோவில் பேசி வெளியிட்டனர். அதில், “நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்கள் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கமாட்டோம்“ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் 12 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது.



அதே வேளையில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. என்.மகேஷ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமாட்டேன் என்றார்.

தற்போதைய நிலையில் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. பா.ஜனதாவின் பலம் 107 ஆக இருக்கிறது. அதோடு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்கள்.

அதாவது ஸ்ரீமந்த்பட்டீல் என்பவர் மும்பையிலும், ஆர்.நாகேந்திரா என்பவர் பெங்களூருவிலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், நாகேஷ் ஆகியோரும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்கள்.

இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

அதே நேரத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கொறடா உத்தரவு பற்றி தெளிவான விளக்கம் கேட்டு கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மனுதாக்கல் செய்துள்ளார். அதுபோல் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் விவகாரத்தில் கவர்னர் ‘கெடு’ விதித்ததை எதிர்த்து முதல்-மந்திரி குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளன. அதே நேரத்தில், கர்நாடக சட்டசபை நிகழ்வுகளும் தொடங்கும். ஆனால், இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏதாவது உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்று காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி எதிர்பார்த்து இருப்பதால், அதற்கேற்ப வாக்கெடுப்பு இழுத்தடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுபோல், கர்நாடக நிலவரம் குறித்து கவர்னர் அனுப்பிய அறிக்கை மீது மத்திய உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதவகையில், சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நிலுவையில் இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பொறுத்தே கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு முடிவு ஏற்படுமா என்று தெரிய வரும்.

இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், நாகேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News