செய்திகள்
அஞ்சலி செலுத்தும் சோனியா, பிரியங்கா

காங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு சோனியா, தலைவர்கள் அஞ்சலி

Published On 2019-07-21 08:17 GMT   |   Update On 2019-07-21 08:37 GMT
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் உடலுக்கு நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் முன்னாள், இந்நாள் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இன்று காலை பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், இன்று பகல் அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஷீலா தீட்சித் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் அவருக்கு பலர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,  பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் சோனியா காந்தி, ‘ஷீலா தீட்சித் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தவர். எனது நட்புக்குரிய மூத்த சகோதரியாக இருந்த அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பேரிழப்பு’ என்று சோகத்துடன் குறிப்பிட்டார்.

டெல்லி அரசின் சார்பில் ஷீலா தீட்சித் மறைவுக்கு (நேற்றிலிருந்து) இருநாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News