செய்திகள்
ஷீலா தீட்சித்துடன் ராகுல் காந்தி (கோப்பு படம்)

காங்கிரஸ் கட்சியின் செல்ல மகள் மறைந்தது பேரிழப்பு - ஷீலா தீட்சித்துக்கு ராகுல் இரங்கல்

Published On 2019-07-20 13:23 GMT   |   Update On 2019-07-20 13:23 GMT
உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்(81) மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு, பிரதமர் நரேதிர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'காங்கிரஸ் கட்சியின் அன்புக்குரிய மகளான ஷீலா தீட்சித் மறைவு செய்தியை அறிந்து  அதிர்ச்சி அடைந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் என்னுடன் நெருக்கமான நல்லுறவுகளை பேணிவந்த அவரது மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும். 

அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், டெல்லி மக்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல் மந்திரிகளும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட இதர அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.



இதற்கிடையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News