செய்திகள்
நவ்ஜோத் சித்து

மந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு

Published On 2019-07-20 07:15 GMT   |   Update On 2019-07-20 07:15 GMT
பஞ்சாப் மந்திரி பதவியில் இருந்து விலகிய சித்துவின் ராஜினாமாவை முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் ஏற்றுக்கொண்டார்.
சண்டிகர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் அரசியல் களத்தில் குதித்தார். முதலில் பா.ஜனதாவில் இருந்த அவர் பின்னர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

சித்து பஞ்சாப் காங்கிரஸ் மந்திரி சபையில் அமைச்சராக இடம் பெற்றிருந்தார். அவருக்கும் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங்குக்கும் இடையே பல்வேறு வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மந்திரி சபை மாற்றத்தின்போது சித்துவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இலாகாவில் இருந்து வேறு இலாகா வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சித்து மந்திரி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல்காந்தியிடம் அனுப்பி வைத்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சித்துவின் ராஜினாமாவை முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் இன்று ஏற்றுக்கொண்டார். இந்த ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

மந்திரிசபை கூட்டத்தில் சித்துவின் ராஜினாமாவை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவரது ராஜினாமாவை அம்ரீந்தர் ஏற்றுக்கொண்டார். டெல்லி சென்று அவர் சமீபத்தில் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு சித்து விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அவர் டெல்லியில் இருந்து திரும்பிய சில தினங்களில் சித்துவின் ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News