செய்திகள்
பாராளுமன்றம்

மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு

Published On 2019-07-20 00:54 GMT   |   Update On 2019-07-20 00:54 GMT
மக்களவையில் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் நேற்று பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அறிமுக நிலையிலேயே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதாவை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும், இது தகவல் அறியும் உரிமையை நீக்கும் மசோதா என்று கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இந்த நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து 9 உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க, 224 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

தகவல் ஆணையர்கள் இந்திய தேர்தல் ஆணையர்களுக்கு இணையாக ஊதியம் பெறுவது நீக்கப்படுகிறது. தகவல் ஆணையர்களின் ஊதியம், பணி நிபந்தனைகள் போன்றவைகளை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கான ஊதியத்தை பெறுகிறார்கள். இதன்மூலம் தகவல் ஆணையர்களும் அதற்கு இணையாக வருகிறார்கள். ஆனால் இரண்டு பேரின் செயல்பாடுகளும் ஒட்டுமொத்தமாக மாறுபட்டவை. தேர்தல் கமிஷன் அரசியல்சாசன அமைப்பு. தகவல் ஆணையம் சட்டரீதியான அமைப்பு. இதன் காரணமாகவே ஊதியம் மாற்றப்படுகிறது.

திருநங்கை உரிமைகள் பாதுகாப்பு சட்டமசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். இதன்மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு அடையவும், அவர்கள் மீதான பாகுபாட்டை தடுக்கவும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் இந்த சட்டமசோதா கொண்டுவரப்படுகிறது.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஒழுங்குமுறையற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். இதன்மூலம் அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்கள் கள்ளத்தனமாக மக்களிடம் டெபாசிட் பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்க வகை செய்யப்படுகிறது. அதேபோல இந்த பணத்தை மக்களுக்கு திரும்ப பெற்றுத்தரவும் வழிகாணப்பட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதாராய் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கர்நாடக அரசியல் நெருக்கடியை கண்டித்து கோஷங்கள் போட்டனர். ‘கர்நாடகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்று’, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த அவையில் மாநிலங்கள் தொடர்பான பிரச்சினையை விவாதிக்க கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் கேள்வி நேரம் முடிந்ததும் உங்கள் கட்சித் தலைவர் கர்நாடக அரசியல் நெருக்கடி பற்றி பேச அனுமதி வழங்குகிறேன். இப்போது கேள்வி நேரம் நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்கு சென்றனர். பின்னர் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கர்நாடக அரசியல் நெருக்கடியை கண்டித்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
Tags:    

Similar News