செய்திகள்
ஸ்ரீமந்த்பாலசாகிப் பாட்டீல்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2019-07-19 10:38 GMT   |   Update On 2019-07-19 10:38 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூர்:

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. முதல்- மந்திரி குமாரசாமி நேற்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

வாக்கெடுப்பு நடத்தும் பிரச்சினை தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டதால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக நேற்றைய சட்டசபையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த்பாலசாகிப் பாட்டீலும் வரவில்லை.

அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவர் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படங்களை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீமந்த்பாலசாகிப் பாட்டீல் மற்றும் எம்.எல்ஏ.க்கள் சட்டசபைக்கு வராததால் பின்னணியில் பா.ஜனதா இருப்பதகா காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால் ஸ்ரீமந்த்பாலசாகிப் பாட்டீல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக அவர் சார்பில் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தனர்.

அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடிதத்தில் அவர் எதற்காக மும்பை சென்றார்? அவர் யாருடன் சென்றார்? என்ற விவரங்கள் இல்லை. மேலும் கடிதத்தில் தேதி குறிப்பிடப்படவில்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை பாரதிய ஜனதா மறுத்துள்ளது.

Tags:    

Similar News