செய்திகள்
சந்திரயான்-2 விண்கலம்

சந்திரயான்-2 பயணம்: 47 நாட்களாக குறைப்பு

Published On 2019-07-19 10:38 GMT   |   Update On 2019-07-19 10:38 GMT
சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணில் செலுத்திய சந்திரயான்-1 ராக்கெட் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

அடுத்தக்கட்டமாக நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பதை கண்டுபிடிக்க ரூ.1000 கோடி செலவில் சந்திரயான்-2 திட்டத்துக்கு இந்தியா விண்கலத்தை தயார் செய்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அடுத்தடுத்து 5 தடவை இந்த விண்கலத்தை ஏவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த 15-ந்தேதி சந்திரயான்-2வை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் உருவான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து மீண்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.

வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.59 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 ராக்கெட் அந்த விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நீள்வட்ட சுற்றுபாதையில் கொண்டு போய்விடும்.

அதன்பிறகு சுமார் 40 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சந்திரயான்-2 விண்கலம் பயணத்தை மேற்கொள்ளும்.

நிலவின் அருகில் நெருங்கி செல்ல 54 நாட்கள் தேவைப்படும் என்று முதலில் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் நிலவில் சந்திரயான்-2 தரை இறக்கப்படும். திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-2வை தரை இறக்கி ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். அதற்கேற்ப சூரியஒளி தென் பகுதியில் வரும் நாட்களை கணக்கில் கொண்டு வருகிற 22-ந்தேதி சந்திரயான்-2 பறக்க உள்ளது.

நிலவில் தரை இறங்கிய பிறகு ஓரு வருடத்திற்கு சந்திரயான்-2 விண்கலம் ஆய்வு பணிகளை மேற் கொள்ளும். நிலவின் மேற் பரப்புகளை தினமும் படம் எடுத்து சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி வைக்கும்.

இதன்மூலம் நிலவில் மனிதர்கள் குடியேற முடியுமா? நிலவில் எத்தகைய தாது பொருட்கள் உள்ளன? என்பதை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியும்.

Tags:    

Similar News