செய்திகள்
மத்திய அரசு

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு உறுதி

Published On 2019-07-19 03:17 GMT   |   Update On 2019-07-19 03:17 GMT
மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது.

எனினும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இருக்கிறதா? என மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? எனவும் அவர் வினவினார்.

இதற்கு மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளிக்கையில், ‘மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை’ என உறுதிபட தெரிவித்தார்.

Tags:    

Similar News