செய்திகள்
எடியூரப்பா

காலவிரயமாக்கி ஆட்சியை காப்பாற்ற முயற்சி- எடியூரப்பா குற்றச்சாட்டு

Published On 2019-07-19 02:18 GMT   |   Update On 2019-07-19 02:18 GMT
காலவிரயமாக்கி ஆட்சியை காப்பாற்ற முயற்சி செய்வதாக கூட்டணி கட்சிகள் மீது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
பெங்களூ :

எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விதான சவுதாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜனநாயகத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். தேவை இல்லாமல் இந்த சபையின் நேரத்தை விரயமாக்கி, அரசை காப்பாற்ற கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (நேற்று) நடத்துமாறு சபாநாயகருக்கு கவர்னர் தகவல் அனுப்பினார்.

அதுபற்றி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட பிறகும் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தில் வெட்கம் இல்லாமல் நீடிக்கிறார். எங்கள் கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கு 99 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.

சபையில் பா.ஜனதா உறுப்பினர்களின் கோபத்தை தூண்டிவிட கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாதபோதும், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாளை (இன்று) என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News