செய்திகள்
மழை

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு

Published On 2019-07-18 07:10 GMT   |   Update On 2019-07-18 07:10 GMT
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது.

ஜூன் 8-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கேரளாவில் மழை பெய்யவில்லை. மாறாக வடமாநிலங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கேரளாவில் மழை கொட்டத் தொடங்கியது. இதையடுத்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி, கேரளாவில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், மலப்புரம், பத்தினம் திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறி உள்ளது. எனவே இங்கு பேரிடர் மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டனர். கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

இதுபோல கடலில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News