செய்திகள்
குமாரசாமி

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம்- பாஜகவை கடுமையாக சாடிய குமாரசாமி

Published On 2019-07-18 06:32 GMT   |   Update On 2019-07-18 06:32 GMT
கர்நாடக சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதல் மந்திரி குமாரசாமி, பாஜகவை கடுமையாக சாடினார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வந்தது. 

மந்திரி பதவி கிடைக் காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாலும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, அரசை கவிழ்ப்பதற்காக அவ்வப்போது காய்களை நகர்த்தி வந்ததாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருக்கவேண்டிய சூழ்நிலை  இருந்தது.

இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். 

ஆனால் அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. அத்துடன் மந்திரிகளாக இருந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்தனர்.  இதனால் கர்நாடக அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது. 

தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி  சபாநாயகருக்கு உத்தர விட முடியாது என்று கூறிவிட்டது. அதேசமயம், சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 

இந்த உத்தரவால் ஆறுதல் அடைந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். எனவே, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 



இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை கர்நாடக சட்டசபை கூடியது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. 

அப்போது, முதல் மந்திரி குமாரசாமி பேசும்போது, பாஜகவை கடுமையாக சாடினார். ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

“கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா?  என்ற கேள்விக்கு பதிலளிக்க நான் இங்கு வரவில்லை. எனது அரசின் மீது நம்பிக்கை உண்டா இல்லையா என்பதை மட்டும் நிரூபிக்க நான் இங்கு வரவில்லை. வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டசபையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள்” என குமாரசாமி பேசினார்.
Tags:    

Similar News