செய்திகள்
பிஸ்வபூஷன் ஹர்சந்த்

ஆந்திர புதிய கவர்னருக்கு ராஜ்பவன் இல்லை

Published On 2019-07-17 10:13 GMT   |   Update On 2019-07-17 10:13 GMT
ஆந்திர மாநிலத்துக்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹர்சந்தனுக்கு ராஜ்பவன் இல்லாததால் அவர் பதவி ஏற்க இருக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை.
நகரி:

ஆந்திர மாநிலத்துக்கு புதிய கவர்னரை நியமித்து ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த பிஸ்வபூ‌ஷன் ஹர்சந்தன் (வயது 85) ஆந்திராவுக்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1971-ம் ஆண்டு முதல் பாரதிய ஜன சங்கத்தில் பணியாற்றிய இவர் 1988-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சட்டப்படிப்பு படித்த வழக்கறிஞரான இவர் ஒடிசா மாநிலத்தில் சட்டத்துறை மந்திரியாக பணியாற்றி உள்ளார். ஒடிசா மாநில பா.ஜனதாவின் துணை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் ஆந்திர மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவான பிறகும் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து தற்போது ஆந்திராவுக்கு மட்டும் புதிய கவர்னராக ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனி தெலுங்கானா மாநிலம் உருவானபோது தலைநகரான ஐதராபாத்தை அந்த மாநிலத்திற்கே விட்டுக் கொடுத்த போதிலும் இரு மாநிலங்களுக்கும் பத்து ஆண்டுகள் ஐதராபாத்தை ஐக்கிய தலைநகராக அறிவித்தனர். ஆனால் அப்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் அமராவதியை தலைநகராக அமைத்துக் கொண்டு குடியேறினார். தற்காலிக சட்டமன்ற கட்டிடத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் ஆந்திராவில் ராஜ்பவன் இல்லை. எனவே புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் எங்கு தங்கியிருப்பார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய கவர்னர் பதவி ஏற்க இருக்கும் தேதியும் இன்னும் முடிவாகவில்லை.
Tags:    

Similar News