செய்திகள்
கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

சட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி

Published On 2019-07-17 08:01 GMT   |   Update On 2019-07-17 08:01 GMT
ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும், சட்டசபைக்கு போகமாட்டோம் என்றும் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபின்னர் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் அதிகரித்தது. அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் சபாநாயகர் கால தாமதம் செய்தார். ராஜினாமாவின் பின்னணியை ஆராய வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமாவை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 



ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமாவை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. அதேசமயம், கர்நாடக சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டது. 

இந்த தீர்ப்பை அதிருப்தி எம்எல்ஏக்கள் வரவேற்றுள்ளனர். அத்துடன், ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு வீடியோ அனுப்பி உள்ளனர். அந்த வீடியோவில் பேசிய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பி.சி.பாட்டீல், ‘நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த முடிவெடுத்தாலும் சேர்ந்தே எடுப்போம். என்ன நடந்தாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்திற்கு போகும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார்.
Tags:    

Similar News