செய்திகள்
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார்

நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு

Published On 2019-07-17 07:11 GMT   |   Update On 2019-07-17 07:11 GMT
கர்நாடகா சட்டசபையில் நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். மதிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்படுவேன்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது உடனடியாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன். நிச்சயமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எனது முடிவுகள் இருக்காது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக எனக்கு கூடுதல் பொறுப்பும், சுமையும் ஏற்பட்டுள்ளது.


இந்த வி‌ஷயத்தில் அரசியல் அமைப்பின் சட்டபிரிவுகள், சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு மற்றும் லோக்பால் அமைப்பின் சட்ட பிரிவுகள் எனக்கு வழிகாட்டிகளாக உள்ளன. அவற்றின் அடிப்படையில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே நான் முடிவுகள் எடுப்பேன்.

எம்.எல்.ஏ.க்கள் மீது முடிவு எடுப்பதற்கு எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. எனக்கு அதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே எனது மனசாட்சிபடி செயல்படுவேன்.

என்றாலும் சட்டசபையில் நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகள் தொடங்கும்.

இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News