செய்திகள்
அசாமில் மழை பாதிப்பு

வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை- அசாம், பீகாரில் உயிரிழப்பு 55 ஆக உயர்வு

Published On 2019-07-17 04:33 GMT   |   Update On 2019-07-17 04:33 GMT
வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் நிலையில், அசாம் மற்றும் பீகாரில் மழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அரியானா, அசாம், பஞ்சாப், பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 

அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால், அங்கிருந்து ஆறுகளில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



அசாம் மற்றும் பீகாரில் மட்டும் மழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி.யில் 14 பேரும், மிசோரம் மாநிலத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் தென் மாநிலமான கேரளாவிலும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கர்சோக் பகுதியில் அதிகபட்சமாக 70 மிமீ மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News