செய்திகள்
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டபோத

பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

Published On 2019-07-16 23:30 GMT   |   Update On 2019-07-16 23:30 GMT
பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் ஏதாவது ஒரு அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இப்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் 26-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இப்போதைக்கு இதுபற்றி அரசு முடிவு செய்யவில்லை. அரசின் சட்டமசோதாக்களை நிறைவேற்றுவதற்காக தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் ஏதாவது ஒரு அவையில் அரசின் பிரதிநிதியாக கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி கூறியதாக தெரிவித்தனர்.

இந்த கூட்டம் குறித்து பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி எம்.பி.க்களிடம், பெரும்பாலானவர்கள் முதல்முறை எம்.பி.யாகி உள்ளர்கள். முதல் முறையாக மக்கள் மனதில் பதியவைத்தால் கடைசி வரை மக்கள் மனதில் இருப்பீர்கள் என்றார்.

ஒரு எம்.பி.யாக உங்கள் பணிகளை தவிர்த்து சமூக அக்கறையுடன் தொழுநோய், காசநோய் போன்ற நோய்களை ஒழிக்க மகாத்மா காந்தி செயலாற்றியது போல பாடுபட வேண்டும். தொழுநோய் ஆஸ்பத்திரிகளை உங்கள் பகுதியில் திறந்துவையுங்கள்.

உலகளவில் காசநோயை 2030-ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் இதனை ஒழிக்க எம்.பி.க்கள் பாடுபட வேண்டும்.

வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் கைவிடப்பட்ட மாவட்டங்களுக்கு சமமானது. எனவே எம்.பி.க்கள் அந்த மாவட்டங்கள் வளர்ச்சி அடைய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பதுடன், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்டங்கள் வளர்ச்சி அடைவதில் அதிகாரிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

அதேபோல உங்கள் தொகுதியை மேம்படுத்தவும் நீங்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கால்நடைகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். பல நாடுகள் கால்நடைகளுக்கு வரும் கால் மற்றும் வாய் நோய்களை கட்டுப்படுத்திவிட்டன. ஆனால் இந்தியாவில் இது இன்னும் பிரச்சினையாக இருந்து வருகிறது என பிரதமர் மோடி எம்.பி.க்களிடம் கூறினார்.

இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தற்போது நடைபெற்றுவரும் கட்சி உறுப்பினர் சேர்க்கும் பணிகளிலும் எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

Similar News