செய்திகள்
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு பணி நடைபெறுகிறது

மும்பை கட்டிட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்

Published On 2019-07-16 10:31 GMT   |   Update On 2019-07-16 13:48 GMT
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பை:

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல் தெருவில் இன்று மதியம் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களும் மீட்பு பணிக்கு உதவி செய்கின்றனர். சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 



பிற்பகல் நிலவரப்படி 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக வீட்டு வசதிதுறை மந்திரி  ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் தெரிவித்தார். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக, இமாம்வாடா மாநகாட்சி பெண்கள் பள்ளியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும்படி மாநகராட்சி கமிஷனருக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News