செய்திகள்
மாநிலங்களவை

அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு

Published On 2019-07-16 07:13 GMT   |   Update On 2019-07-16 10:41 GMT
தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாளில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வை  நடத்தும்படி வலியுறுத்தினர்.

இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், அதிமுக எம்பிக்கள் இந்த பிரச்சனையை மீண்டும் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும், அதிமுக எம்பிக்கள் சமாதானம் அடையாமல் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை தொடங்கியபோதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

தபால் துறை தேர்வை தமிழில் நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நாளை விளக்கம் அளிப்பார் என இணை மந்திரி முரளிதரன் உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

Similar News