செய்திகள்
சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை

Published On 2019-07-16 02:12 GMT   |   Update On 2019-07-16 02:12 GMT
ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை எடுக்க சித்தராமையா தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 13 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நேற்று கர்நாடக சட்டசபை கூடியது. இந்த கூட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சித்தராமையா ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

யஷ்வந்தபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஓட்டலில் வைத்தே நேற்று காலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள 13 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி கூட்டத்திற்கு வந்திருந்தார்.

கூட்டத்தில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கட்சி விரோத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. கூட்டணி அரசை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் காங்கிரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இதுபோன்று இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருக்க அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது, அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் ஓட்டலில் இருந்து விதானசவுதாவுக்கு சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News