செய்திகள்
டிகே சிவக்குமார்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும்- டிகே சிவக்குமார் நம்பிக்கை

Published On 2019-07-16 02:08 GMT   |   Update On 2019-07-16 02:08 GMT
ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு விதானசவுதாவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியான பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். இதனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார். அது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருகிற 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும். அதில், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

எப்படி வெற்றி பெறுகிறோம், என்ன செய்ய உள்ளோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி அரசை கவிழ்க்க முடியாது. இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.



எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். சட்டசபைக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் உள்ளனர். கொறடா உத்தரவையும் யாரும் மீறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும்.

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை காட்டுவோம்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். 
Tags:    

Similar News