செய்திகள்
ஆசாராம் பாபு

பாலியல் வழக்கு- ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-07-15 08:21 GMT   |   Update On 2019-07-15 08:21 GMT
பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது தங்களை சாமியாரும் அவரது மகனும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு ஆசாராம் பாபு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை 210 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கீழ் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News