செய்திகள்
பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா

நம்பிக்கை வாக்கெடுப்பு பெயரில் குமாரசாமி நாடகமாடுகிறார்- பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா

Published On 2019-07-15 02:49 GMT   |   Update On 2019-07-15 02:49 GMT
கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு பெயரில் முதல்-மந்திரி குமாரசாமி நாடகமாடுகிறார் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கூறினார்.
பெங்களூரு :

பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக அவர்கள் கூறுவது ஏன்? என்பது தெரியவில்லை.

யாருடைய வற்புறுத்தலுக்கும் உடன்படவில்லை. சுயவிருப்பத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் காலதாமதம் செய்கிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறமாட்டோம் என்று பலமுறை கூறிவிட்டனர். ராமலிங்க ரெட்டியை தவிர்த்து மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குமாரசாமியின் கண்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

இத்தகைய சூழலில் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்வதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமி நாடகமாடுகிறார். இதற்கு பதிலாக குமாரசாமி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் யாரும் குழந்தைகள் இல்லை. அவர்களை சமாதானம் செய்து ராஜினாமாவை வாபஸ் பெற வைப்பது என்பது முடிந்துபோன அத்தியாயம். பெரும்பான்மை இல்லாத நிலையில் குமாரசாமி முதல்-மந்திரியாக தொடருவதில் அர்த்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News