செய்திகள்
சந்திரயான்-2 விண்கலம்

சந்திரயான்-2 கவுன் டவுன் தற்காலிக நிறுத்தம்

Published On 2019-07-14 20:59 GMT   |   Update On 2019-07-14 21:22 GMT
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலம், தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீஹரிகோட்டா:
   
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1  உறுதி செய்தது.

அதைத்தொடர்ந்து, சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
 
சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனம், சந்திரனில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனம், அங்கு தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகவும் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 15-7-2018 அன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த நாள் குறிக்கப்பட்டது. அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுண் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், இன்று அதிகாலை சரியாக 2.51 மணிக்கு சந்திராயன் விண்ணில் பாயும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கவுன் டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்,  ஏவுகணை ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கையில் கோளாறு கண்டுப்பிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தரப்பில் விளக்கம்  தரப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் விபரம் குறித்த தகவல்கள் பின்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News