செய்திகள்
ராகுல் காந்தி

அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்றார் ராகுல் காந்தி

Published On 2019-07-12 11:16 GMT   |   Update On 2019-07-12 11:16 GMT
அகமதாபாத் கூட்டுறவு வங்கி ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை முறைகேடு செய்து மாற்றியதாக பேசிய ராகுல் காந்தி இதுதொடர்பான வழக்கில் இன்று ஜாமீன் பெற்றார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒருவர் ஆவார்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்த வங்கி முறைகேடு செய்து சட்டப்பூர்வமானதாக மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.


இதை மறுத்த மாவட்ட கூட்டுறவு வங்கி, ராகுல்காந்தி பொய் குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறி அவருக்கு எதிராக அகமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

அந்த வங்கியின் தற்போதைய இயக்குனர் அஜய் பட்டேல் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல்காந்தி ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

ராகுல்காந்தி தரப்பில் ஆஜரான அவரது வக்கீல், ‘வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க மேலும் சில காலம் தேவைப்படுகிறது. எனவே, ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதனால் ராகுல் காந்தி ஜூலை 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை அகமதாபாத் வந்த ராகுல் காந்தி அகமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

Tags:    

Similar News