செய்திகள்
கிரண் பேடி

புதுவையில் அதிகாரம் யாருக்கு? - மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2019-07-12 09:03 GMT   |   Update On 2019-07-12 11:26 GMT
புதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாகங்களில் தலையிடும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்னும் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.
புதுடெல்லி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், யூனியன் பிரதேசங்களில் உள்ள கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிகளின் அதிகார வரம்பை மீறி செயல்பட முடியாது என முன்னர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

மேலும், புதுச்சேரியில் அரசு அலுவல்கள் தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இருந்த கவர்னருக்கான அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார்.



சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இந்த வழக்கின் முதல் விசாரணை ஜூன் 30-ம் தேதி தொடங்கியது.

இன்று நடைபெற்ற மறுவிசாரணையின்போது மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘புதுவை கவர்னருக்கான அதிகாரத்தை கட்டுப்படுத்தி முன்னர் உத்தரவிட்டிருந்த சென்னை ஐகோர்ட்டின் அமர்வில் இதுதொடர்பாக கிரண் பேடி அணுகி தீர்வு காணலாம்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News