செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் தடை

Published On 2019-07-12 08:09 GMT   |   Update On 2019-07-12 11:24 GMT
கர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காரசாரமான வாதம் நடைபெற்றது.
புதுடெல்லி:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர். அவர்களை கட்சி தலைமை சமாதானம் செய்து வந்தது. இருப்பினும் அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பதில் தீவிரமாக இருந்தனர்.

ஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.  

அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா விஷயத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தியது. அத்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகரை சந்திக்கும்படி கூறியது. அதன்படி அனைவரும் நேற்று சபாநாயகரை சந்தித்தனர்.

ஆனால், சபாநாயகரோ ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். முழுமையாக விசாரணை நடத்தி, அந்த விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைக்கும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் இன்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறினர்.

இதேபோல் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அவர்கள்  தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது என கூறியுள்ளனர்.

“அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது” என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகா தொடர்பான இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடினர். இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான வாதம் நடைபெற்றது.



அரசியலமைப்பு சட்ட விதிகள் பற்றி விளக்கி கூறிய அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பு பதவியை சபாநாயகர் வகிப்பதாகவும் கூறினார். சபாநாயகர் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர், அவருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியும், அவரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்று வழக்கு தொடரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு சபாநாயகருக்கு தைரியம் இல்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.

“ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. ராஜினாமாவை ஏற்பது பற்றியோ, நிராகரிப்பது பற்றியோ எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இது அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளது” என நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கின் விசாரணையை 16-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News