செய்திகள்
காவல் அதிகாரி தாக்கும் படம்

ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் போலீஸ் தாக்குதலா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-07-11 06:21 GMT   |   Update On 2019-07-11 06:21 GMT
ஜெய் ஸ்ரீராம் என சொன்னதால் போலீசார் ஒருவரை தாக்குவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவலின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



சமூக வலைத்தளங்களில் ஜெய் ஸ்ரீராம் சர்ச்சை மீண்டும் பூதாகரமாய் வெடித்துள்ளது. 

மேற்கு வங்க காவல் துறை அதிகாரி மற்ற போலீசார் முன்னிலையில் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டதால் தாக்கப்படுகிறார் என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் பதிவாகி இருக்கும் இந்த வீடியோவில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிடுபவரை போலீசார் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அதன் உண்மை பின்னணி புலப்பட்டது. உண்மையில் தற்சமயம் பரவும் வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகவும். வீடியோவில் உள்ள சம்பவத்திற்கும் மேற்கு வங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

எனினும், தற்போதைய வைரல் ஃபேஸ்புக் பதிவினை பல்லாயிரம் பேர் உண்மையென நினைத்து பகிர்ந்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் இந்த வீடியோ உண்மையில் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது தானா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர். 

முப்பது வினாடிகள் ஓடும் வீடியோவில் சிவப்பு நிற சட்டை அணிந்திருக்கும் நபர் ஒருவரை காவல் அதிகாரி மற்ற காவலர்கள் முன்னிலையில் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காவல் அதிகாரி இந்தி மொழியில் பேசிக் கொண்டே தாக்குதலை தொடர்கிறார். தாக்குதலுக்குள்ளான நபர் தொடர்ந்து ஜெய் பஜ்ரங் பலி என கோஷமிட்டுக் கொண்டிருந்தார்.

உண்மையில் இந்த வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் யூடியூபில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனை இந்தியா சோன் செப்டம்பர் 30, 2014 இல் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது. இதே வீடியோவை 2015 இல் மற்றொரு நபர் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

வைரல் பதிவுகளை மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவில் ஹனுமன் ஜெயந்தி தினத்தில் இந்து நபரை இரண்டு முஸ்லீம் அதிகாரிகள் தாக்குகின்றனர் எனும் பொய் தகவலை தலைப்பாக பதிவிட்டிருக்கிறார்.



தாக்கப்படும் நபர் சென்குப்தா என்றும் அவர் போலி செய்திகளை பரப்பி பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார் எனவும் மேற்கு வங்க சி.ஐ.டி.யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவர் பரப்பிய போலி செய்தியும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த சம்பவம் அரங்கேறி ஐந்து ஆண்டுகளாகி விட்டது என்றும், தற்போதைய வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். 

சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News