செய்திகள்
எடியூரப்பா

குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி கர்நாடக சட்டசபை வளாகத்தில் எடியூரப்பா ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-10 08:22 GMT   |   Update On 2019-07-10 08:22 GMT
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் என அம்மாநில சட்டசபை வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் ஒட்டுமொத்தமாக மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து  முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.



இதையடுத்து, ‘ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும்’ என வலியுறுத்தி இன்று காலை 11 மணியளவில் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில் பாஜகவினர்  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய எடியூரப்பா, ‘வரும் 12-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆனால், அங்கு ஆளும்கட்சிக்கு போதுமான பெரும்பான்மை தற்போது இல்லை. எனவே, முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பாஜக ஆட்சி அமைய வழிவிட வேண்டும்’ என்றார்.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை சிவக்குமார் கிழித்தெறிந்ததை சபாநாயகர் இதுவரை கண்டிக்கவில்லை. இன்று பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகரை சந்தித்து 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தர்ணா போராட்டத்துக்கு பின்னர் கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை சந்திப்பதற்காக எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.
 
Tags:    

Similar News