செய்திகள்
மத்திய பட்ஜெட்

கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை - மத்திய பட்ஜெட்டில் தகவல்

Published On 2019-07-08 22:23 GMT   |   Update On 2019-07-08 22:23 GMT
கடந்த 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய பா.ஜனதா தலைமையிலான அரசு நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டது. குறிப்பாக பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பலர் வேலை இழந்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிதாக வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து கூறப்பட்டுள்ள தாவது:-

மத்திய அரசு நிறுவனங்களில் 2017-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி 32 லட்சத்து 38 ஆயிரத்து 397 பேர் வேலை பார்த்து வந்தனர். 2019-ம் ஆண்டு இதே தேதியில் இந்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 596 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 199 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ரெயில்வேயில் மட்டும் 98,999 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் படையில் 80 ஆயிரம் புதிய வேலைகளும், மறைமுக வரிகள் துறைகளில் 53 ஆயிரம் வேலைகளும், நேரடி வரிகள் துறைகளில் 29,935 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சக துறையில் 46,347 புதிய வேலைகளும், அணுசக்தி துறையில் 10 ஆயிரம் வேலைகளும், தொலைதொடர்பு துறையில் 2,250 வேலைகளும், நீராதார துறைகளில் 3,981 வேலைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் 7,743 வேலைகளும், சுரங்கத்துறை அமைச்சகத்தில் 6,338 வேலைகளும், விண்வெளித்துறையில் 2,920 வேலைகளும், பணியாளர் துறை அமைச்சகத்தில் 2,056 வேலைகளும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 1,833 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

கலாசாரத்துறை அமைச்சகத்தில் 3,647 வேலைகளும், வேளாண் அமைச்சகத்தில் 1,835 வேலைகளும், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் 1,189 வேலைகளும் கடந்த 2 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News