செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி குமாரசாமி காரில் வந்தபோது எடுத்தபடம்.

காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை- அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முடிவு

Published On 2019-07-08 02:20 GMT   |   Update On 2019-07-08 02:20 GMT
கர்நாடகத்தில் உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி அழைத்து வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடக கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 10 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று இரவு பெங்களூரு வந்தார். அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த குமாரசாமி, அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார்.

எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய குமாரசாமி, அங்கிருந்து நேராக ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், ஆகியோருடன் குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.



அப்போது, கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, எப்படியாவது கூட்டணி ஆட்சியை காப்பாற்ற வேண்டியதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசித்தனர். மேலும் ஜனதாதளம்(எஸ்) அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமியும், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்களும் சமாதானம் செய்து அவர்களின் ராஜினாமாவை திரும்ப பெற வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முயற்சி இன்று (திங்கட்கிழமை) வரை செயல்படுத்த வேண்டும். ஒருவேளை சமாதான முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News