செய்திகள்
முதல்-மந்திரி குமாரசாமி

குமாரசாமி அரசு கவிழுமா?- ஆட்சியை காப்பாற்ற தலைவர்கள் தீவிர முயற்சி

Published On 2019-07-08 01:58 GMT   |   Update On 2019-07-08 01:58 GMT
கர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். அதன்படி, எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார்.

ஆனால், பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியாததால், அவர் பதவி விலகினார். பின்னர், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி, முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள தலைவர்களிடையே மோதல் நிலவி வந்தது. முதல்-மந்திரி குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதலையும் தாண்டி, கூட்டணி அரசு 13 மாதங்களாக நீடித்து வருகிறது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ., கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரே நாளுக்குள் அடங்கிவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதன்மூலம் ஆனந்த் சிங்குடன் சேர்த்து மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசின் பலம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், இந்த அரசு உடனடியாக பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்துவிடும். ராஜினாமா கடிதம் அளித்தவர்களில், 10 எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக விமானம் மூலம் மும்பை சென்றனர். அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள வீட்டில் தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அவரை நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, “சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் ராஜினாமா செய்துள்ளனர். அதனால் இதன் பின்னணியில் சித்தராமையா இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இதுவரை பிரச்சினை செய்யாதவர்கள் திடீரென ராஜினாமா செய்ய காரணம் என்ன?. காங்கிரசாரின் இந்த செயல் சரியல்ல. தேவைப்பட்டால், குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரியாக்கினால் ஆதரவு அளிக்கிறோம். ஆனால் சித்தராமையா முதல்-மந்திரியாக எங்கள் கட்சி ஆதரவு அளிக்காது” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடக அரசியலில் தற்போது எழுந்துள்ள நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (அதாவது நேற்று) இரவு பெங்களூரு வருகிறார். அவர் வந்தவுடன் இந்த அரசியல் நிலவரம் குறித்து முடிவு எடுப்போம். கூட்டணி அரசை காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம்” என்றார்.

இதற்கிடையே தேவேகவுடா ஒரு செய்தி தொலைக் காட்சியை தொடர்பு கொண்டு, கூறும்போது, “நான் யார் மீதும் குறை கூறவில்லை. சித்தராமையாவுக்கோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவுக்கோ முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் தவறானவை” என்றார்.

இந்த அரசியல் குழப்பங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய தேவேகவுடா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு சித்தராமையாதான் காரணம் என்று புகார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலகுவார் என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரி ஆக்கினால், தனது கட்சி ஆதரிக்கும் என்றும் சோனியா காந்தியிடம் தேவேகவுடா கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.

பின்னர், மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து, கர்நாடகாவில் கட்சி பணிகளை கவனிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில், கார்கே, நேற்று பெங்களூருவுக்கு வந்தார். அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ராஜினாமாவை திரும்பப்பெற வாய்ப்புள்ளது. யாரும் காங்கிரசை விட்டு செல்ல மாட்டார்கள். 12-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்போம்” என்று கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக பெங்களூருவில் முகாமிட்டு பல்வேறு நிர்வாகிகளை சந்தித்தார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மூத்த மந்திரி டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கே.சி.வேணுகோபாலுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில், தற்போது மந்திரியாக உள்ள அனைவரையும் ராஜினாமா செய்யவைத்து, ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்தும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், 7-வது முறையாக எம்.எல்.ஏ.வாகி உள்ள முன்னாள் மந்திரியுமான ராமலிங்கரெட்டிக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுப்பது குறித்தும் ஆலோசித்தனர்.

இதற்கிடையே ராமலிங்கரெட்டியை கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், முதலில் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறும், அவருக்கு முக்கிய பொறுப்பு அதாவது துணை முதல்-மந்திரி பதவி வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதற்கு ராமலிங்கரெட்டி சாதகமான பதிலை கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் சித்தராமையா, மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். உடனே புறப்பட்டு பெங்களூரு வரும்படி அழைப்பு விடுத்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கே.சி.வேணுகோபால் சந்திக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அவர்களை சரிக்கட்டும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்.



மும்பை ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கி சென்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளியை சந்தித்து, ராஜினாமாவுக்கான காரணத்தை கேட்டறிந்ததாக அவர் கூறினார். குமாரசாமி வந்தவுடன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

அதே ஓட்டலில், மராட்டிய மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரசாத் லாட் காணப்பட்டார். ஆனால், கர்நாடக பிரச்சினைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார். அதுபோல், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மும்பை ஓட்டலில் தங்கி இருப்பது தங்களுக்கு தெரியாது என்று மராட்டிய மாநில பா.ஜனதா தெரிவித்தது.

இதற்கிடையே, மும்பையில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு மராட்டிய மாநில காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்ட இந்த சிக்கலுக்கு பா.ஜனதா தூண்டுதலே காரணம் என்று மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதை மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

தற்போதைய சிக்கலுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடப்பதை நாங்கள் பொறுமையாக பார்த்து வருகிறோம். இரு கட்சிகளின் மோதலால், இந்த அரசு தானாகவே கவிழும். சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவில்தான் இது அடங்கி இருக்கிறது.

நாங்கள் அரசியல் சந்நியாசிகள் அல்ல. எனவே, இந்த அரசு கவிழ்ந்தால், ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். ஏனென்றால், உடனடியாக இன்னொரு தேர்தலை சந்திக்க மக்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில், பா.ஜனதாவின் தேசிய தலைமையுடன் கலந்து ஆலோசித்தே எந்த முடிவையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் ஆவர்.

காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள தலைவர்களின் தீவிர முயற்சியால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானம் அடைவார்களா? சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு என்ன? கூட்டணி அரசு தப்புமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

Tags:    

Similar News