செய்திகள்
குமாரசாமி

கர்நாடகத்தில் மேலும் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- குமாரசாமி அரசு கவிழ்கிறது

Published On 2019-07-06 10:19 GMT   |   Update On 2019-07-06 10:19 GMT
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் இன்று ராஜினாமா செய்திருப்பதால், குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை.

பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க 38 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜே.டி.எஸ். கட்சியும், 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளனர்.

சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் இந்த கூட்டணி அரசுக்கு உள்ளது. அவர்கள் 2 பேரையும் குமாரசாமி, மந்திரிகளாக நியமித்தார்.

இந்த கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமேஷ் ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116-ஆக குறைந்து விட்டது.




ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஆனந்த்சிங் வழங்கினார். ரமேஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.

இந்த நிலையில் இன்று ஜே.டி.எஸ். கட்சி. முன்னாள் மாநில தலைவர் எச்.விஸ்வநாத், கோபாலய்யா, வி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க விதான்சவுதா சென்றனர். ஆனால் சபாநாயகர் அங்கு இல்லை. இதையடுத்து சபாநாயகரின் செயலாளரிடம்  ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். பின்னர் 6 ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள், ராஜ்பவன் சென்று சபாநாயகரை சந்தித்தனர்.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் ராஜினாமா உறுதி செய்யப்படும்பட்சத்தில் எந்த நேரத்திலும் குமாரசாமி ஆட்சி கவிழலாம்.

குமாரசாமி ஆட்சி மெஜாரிட்டியை இழந்தால், பாஜக ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் இறங்கும். இதற்காக மாநில தலைவர் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்களை சமாதானம் செய்து, ராஜினாமாவை திரும்ப பெற வைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபடும் என தெரிகிறது. அமைச்சர் பதவி தருவதாகக்கூட அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கலாம்.

குமாரசாமியும், 2 அமைச்சர்களும் அமெரிக்காவில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டு ராவும் வெளிநாட்டில் இருக்கிறார். எனவே, முதல்வர் நாடு திரும்பும் வரை எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படமாட்டாது என தெரிகிறது.
Tags:    

Similar News