செய்திகள்
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள்

மகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து - பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

Published On 2019-07-04 12:03 GMT   |   Update On 2019-07-04 12:03 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் அணை உடைந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது.
 
இதனால் அணையின் அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களை காணவில்லை. மேலும், அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இதற்கிடையே, வீடுகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடினர்.  நேற்று நிலவரப்படி 3 பெண்கள் உள்பட 9 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 12 பேரைக் காணவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திவாரே அணை உடைந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மாயமான 8 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News