செய்திகள்
பிரியங்கா - ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் முடிவு குறித்த பிரியங்காவின் கருத்து

Published On 2019-07-04 08:39 GMT   |   Update On 2019-07-04 08:39 GMT
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ராஜினாமா செய்தார். இது குறித்து பிரியங்கா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது.  அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தனது ராஜினாமா குறித்து கூறுகையில், ‘நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை.

காங்கிரஸ் காரிய கமிட்டியை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள்’ என கூறியுள்ளார். இந்த செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராகுல் காந்தி எடுத்த இந்த முடிவை தைரியமுள்ள சிலரால் மட்டுமே செய்ய முடியும். அவரது இந்த முடிவிற்கு எனது ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன்’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News