செய்திகள்
பீர் பாட்டிலில் ஒட்டப்பட்ட காந்தியின் புகைப்படம்

பீர் பாட்டில்களில் காந்தியின் புகைப்படம் -பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிறுவனம்

Published On 2019-07-04 03:36 GMT   |   Update On 2019-07-04 03:36 GMT
இஸ்ரேலின் பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, பீர் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஒட்டி இருந்தது. இதற்கு அந்நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
ஜெருசலேம்:

இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கடந்த மே மாதம் அந்நாட்டின் பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புது வகையான பீர் பாட்டில்களை தயாரித்தது.

இந்த பாட்டில்களின் மேல் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களில் சில புகழ்ப்பெற்ற தலைவர்களின் படங்கள் இருந்தன. இதில் இன்றளவும் அனைவரின் மனதிலும் நீங்காது இடம் பெற்ற முக்கிய தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பாட்டில்களில் ஒட்டப்பட்ட புகைப்படங்களில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான டேவிட் பென் குரியன், கோல்டா மேர், மெனாசம் பெகின் மற்றும்  இந்தியாவின் தேச தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் புகைப்படமும் இருந்தது.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களில் காந்தியின் புகைப்படமே இஸ்ரேல் நாட்டைச் சேராத ஒருவரது புகைப்படம் ஆகும். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலங்களவையிலும் இது குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டது.

இதனையடுத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தெரிவித்தார். இதனையடுத்து மத்திய அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.



இதன் விளைவாக அந்நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் கிளாட் ரோர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் செயல், மனதை புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அதற்காக இந்திய மக்களிடமும், இந்திய அரசிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் மகாத்மா காந்தியின் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறோம். எவ்வித தவறான நோக்கத்தோடும் இவ்வாறு செய்யவில்லை. பாட்டில்களில் இருந்து மகாத்மா காந்தியின் புகைப்படத்தை நீக்க நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News