செய்திகள்
ஓம் பிர்லா

மக்களவையை சட்டசபையாக மாற்றிவிடாதீர்கள்- மேற்கு வங்க எம்.பி.க்களை கண்டித்த சபாநாயகர்

Published On 2019-07-03 11:21 GMT   |   Update On 2019-07-03 11:21 GMT
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்த சபாநாயகர், மக்களவையை மேற்கு வங்க சட்டசபையாக மாற்றிவிடாதீர்கள் என அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் காரசாரமாக மோதிக்கொண்டன. மக்களவையில் ஜீரோ அவரில் திரிணாமுல் காங்கிரஸ்  எம்பி சுதிப் பந்தோபாத்யாய் பேசும்போது, தனது கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதாகவும், அவரது கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேற்கு வங்க சட்டசபையில் இதேபோன்று பிரதமருக்கு எதிராக பேசியிருந்தால், ஆளுங்கட்சி (பாஜக) எவ்வாறு பதிலடி கொடுத்திருக்கும்? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக எம்பிக்கள் சுமித்ரா கான், அர்ஜுன் சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்கும்படி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்களின் அமளி குறையவில்லை. இதனால் கடுப்பான சபாநாயகர் ஓம் பிர்லா, இரு தரப்பினரையும் கண்டித்தார்.

ஒருவரையொருவர் குற்றம்சாட்டி அவையில் பேசக் கூடாது என்று கூறிய அவர், தயவு செய்து மக்களவையை மேற்குவங்க சட்டசபையாக மாற்றிவிடாதீர்கள் என்றார். சர்ச்சைக்குரிய எந்த கருத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News