செய்திகள்
அமித் ஷா

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க பாராளுமன்றம் ஒப்புதல்

Published On 2019-06-28 09:23 GMT   |   Update On 2019-06-28 11:49 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க பாராளுமன்ற மக்களவை இன்று ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சி கடந்த 19-6-2018 அன்று கவிழ்ந்தது.



இதைதொடர்ந்து, அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு 6 மாத காலம் கவர்னர் ஆட்சியும், பின்னர் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஜூலை மூன்றாம் தேதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் கடந்த ஓராண்டு காலமாக கவர்னர் ஆட்சிக் காலத்தின்போதும், ஜனாதிபதி ஆட்சிக் காலத்தின்போதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் வேர்களை அறிந்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேபோல், முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் ரத்தக்களறியை சந்தித்த காஷ்மீரில் இந்த முறை நடந்த தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

எனவே, காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானத்தை கட்சி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும் என இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த அமித் ஷா வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்தனர். அதன்பின்னர், மக்களவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News