செய்திகள்

உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்காக மத்திய கல்வி மசோதா தாக்கல்

Published On 2019-06-28 00:05 GMT   |   Update On 2019-06-28 00:05 GMT
உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கு வகைசெய்யும் மத்திய கல்வி மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

உயர் கல்வி நிறுவனங்களில், பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட வேண்டிய ஆசிரியர் இடங்களை கணக்கிட தனித்துறை அமைக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு ஏற்ப பல்கலைக்கழக மானியக்குழு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறுஆய்வு மனுவையும் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கோர்ட் தீர்ப்பை செயலிழக்கச் செய்வதற்காக, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர், கடந்த மோடி ஆட்சியில் மத்திய கல்வி மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதி ஆனது.

இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சஞ்சய் தோட்ரே இதை தாக்கல் செய்தார்.

உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை புதிய ஒதுக்கீட்டு முறைக்கு உட்பட்டு நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்த மசோதா வகைசெய்கிறது.

மருத்துவ கல்வியை நிர்வகிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில், முறைகேடு புகார்கள் காரணமாக கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, நிர்வாகிகள் குழு அமைத்து, மருத்துவ கல்வியை நிர்வகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, கடந்த மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால், அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே தாக்கல் செய்தார்.

இந்திய மருத்துவ கவுன்சில் மாற்றி அமைக்கப்படும்வரை, நிர்வாகிகள் குழு 2 ஆண்டுகளுக்கு மருத்துவ கல்வியை நிர்வகிக்கும். மருத்துவ கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களுடனும் அக்குழு செயல்படும்.

மாநிலங்களவையில், பருவநிலை மாற்றத்தால் எழுந்த சூழ்நிலை குறித்து சமாஜ்வாடி உறுப்பினர் ரேவதி ராமன்சிங் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

அப்போது அவர், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க எல்லாவகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேற்கு வங்காளத்தின் பெயரை வங்க மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் ‘பங்க்ளா’ என்று மாற்ற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ரே மாநிலங்களவையில் கேட்டுக்கொண்டார்.

மேற்கு வங்காளத்தில் அரசு திட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் லஞ்சப்பணம் வாங்குவதாக கூறப்படும் விவகாரத்தை பா.ஜனதா உறுப்பினர் சவுமித்ரா கான் மக்களவையில் எழுப்பினார். மாநில முதல்-மந்திரிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எவ்வளவு லஞ்சப்பணம் சென்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய ஓமியோபதி கவுன்சில், மாற்றி அமைக்கப்பட வேண்டி இருப்பதால், அதற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான இந்திய ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளியான ராணுவ வீரர்களுக்கு தனி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம், வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட்டதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதையடுத்து, இப்பிரச்சினையை கவனிப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்கூடங்களை அமைக்க அறக்கட்டளைகளுக்கு அனுமதி அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. ஏற்கனவே மக்களவையிலும் நிறைவேறி இருப்பதால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று விட்டது.
Tags:    

Similar News