செய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் மோடி- இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

Published On 2019-06-27 03:39 GMT   |   Update On 2019-06-27 03:39 GMT
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த மோடிக்கு, இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி:

ஜி-20  அமைப்பின் ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இதில் ஜி20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்டார்.

இன்று காலை ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தார். அவரை ஜப்பான் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் சுவிசோட்டல் நங்காய் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை இந்திய சமூகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய மோடி, தனது அறைக்குச் சென்றார்.



இன்று மதியம் 1.50 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவு 7 மணிக்கு குபேயில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.  

மேலும், ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 உச்சி மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்தியாவில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற பொதுவான சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஜி20 மாநாட்டில் மோடி முன்வைக்க உள்ளார்.
Tags:    

Similar News