செய்திகள்

ரஷியாவிடம் ஆயுத கொள்முதல்: எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் - அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி

Published On 2019-06-26 14:25 GMT   |   Update On 2019-06-26 14:25 GMT
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை நாங்கள் செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி:

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற `எஸ் 400’ ஆயுதத்தை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இவை 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிடம் முழுவதும் ஒப்படைக்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவிடமிருந்து `எஸ் 400’ ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கும் திட்டத்தை யாருடைய தலையீட்டின் காரணமாகவும் கைவிடும் எண்ணம் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, இந்தியா வந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 



இந்நிலையில், அமெரிக்காவால் பொருளாதார தடைவிதிக்கப்பட்ட ரஷியா உள்பட பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களில் தேச நலனுக்காக முன்நோக்கிச் செல்லும் என்பதை இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், எங்களுடைய உறவுகளுக்கு ஒரு வரலாறு உண்டு. நம்முடைய தேச நலனுக்கானதை நாம் செய்வோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் தேச நலனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளும் திறன் மூலோபாய நட்பாகும். இந்தியா-அமெரிக்க மூலோபாய நட்பு என்பது ஆழமான, பரந்த ஒருங்கிணைப்பை அடிப்படையாக கொண்டது. பாம்பியோவுடன் எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News