செய்திகள்

கும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்- மாநிலங்களவையில் மோடி உரை

Published On 2019-06-26 10:05 GMT   |   Update On 2019-06-26 10:05 GMT
தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை கேள்விக்குட்படுத்துவதன் மூலம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்திய வாக்காளர்களை அவமதித்து வருகிறது.

உலக அளவில் பாராட்டு பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை காங்கிரஸ் குறை கூறுகிறது. நாங்களும் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. காங்கிரஸ் குறை கூறுவதை பார்க்கும்போது அவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது.

பாஜக பெற்ற வெற்றி, நாடு அடைந்த தோல்வி என கூறுவது ஜனநாயகத்தை அவமானப்படுத்துவதாகும். தாங்கள் வெற்றி பெறாவிட்டால், இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா?  அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் தோற்றுவிட்டதா என்ன?



17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி ஆராய்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான நேரம் இது.

தனி மனிதர்கள் மீதான கும்பல்  தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது. கும்பல் வன்முறை என்பது இந்திய மனநிலைக்கு எதிரானது.

கும்பல்  தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News