செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் கைது - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

Published On 2019-06-25 21:45 GMT   |   Update On 2019-06-25 21:45 GMT
ஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து பயங்கரவாத பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில போலீசாரின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ். அமைப்பு சமூக வலைதளங்களில் தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை பல்வேறு வழிகளில் பரப்பி வருகிறது. அவற்றை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்த அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் சிறப்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால்தான் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 733 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் 16-ந் தேதிவரை 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு 257 பேரும், 2017-ம் ஆண்டு 213 பேரும், 2016-ம் ஆண்டு 150 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டைகளில் 112 பொதுமக்களும் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் 15 பேரும், 2017-ம் ஆண்டு 40 பேரும், 2018-ம் ஆண்டில் 39 பேரும், இந்த ஆண்டின் 3 மாதங்களில் 18 பொதுமக்களும் உயிரிழந்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News