செய்திகள்

130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி

Published On 2019-06-25 12:42 GMT   |   Update On 2019-06-25 12:42 GMT
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்கு சேவை செய்யும் சிறப்பான வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றும் இன்றும் மக்களவை எம்.பி.க்கள் பேசி வருகின்றனர்.

இன்று மாலை மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 130 கோடி மக்களுக்கு சேவை செய்யும் சிறப்பான வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பலமான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தங்களது நலனைவிட நாட்டின் நலன் முக்கியமானது என்ற எண்ணத்துடன் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வெறும் வெற்றி-தோல்வியாக தேர்தல்களை நான் பார்ப்பதில்லை. 130 கோடி மக்களுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்வில் சாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை எனக்கு கிடைத்த சிறப்பாக நான் கருதுகிறேன்.



’அவர்களிடமிருந்து’ தப்பிக்கும் ஒரே வழி என்று மக்கள் நினைத்ததால்தான் நாங்கள் 2014-ம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றோம்.

சுதந்திர போராட்டக் காலத்தில் பல வீரமிக்க பெண்களும் ஆண்களும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அந்த தியாகிகள் கனவுகண்ட இந்தியாவை நாம் கட்டமைத்தாக வேண்டும். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடுமாறு உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
 
கடந்த 70 ஆண்டுகளாக இருந்துவரும் நடைமுறைகளை எல்லாம் மாற்றுவதற்கு காலமாகும் என்பது எனக்கு தெரியும். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பில் இருந்து விண்வெளித்துறை வரை எங்களது பிரதான இலக்கில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. 

வலிமையான, முன்னேற்றமடைந்த, ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கும் கனவு நனவாக நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News